குழந்தையும் போயிட்டா.. அவரும் போயிட்டார்.. நிர்கதியாய் தவிக்கும் தாய்..! ஒரு ஊதாரி இளைஞரால் விபரீதம்

0 7400

தனது மகள் ரெயிலுக்குள் தள்ளி கொலை செய்யப்பட்டது முதல் தனது கணவர் உயிரிழந்தது வரை எதுவும் தெரியாமல் மார்பக புற்று நோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பெண் தலைமை காவலர், உண்மை தெரிந்து காவல் ஆணையரை கண்டு கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவி சத்யஸ்ரீ ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்டார். ரயில் ஏறியதில் தலை துண்டான தனது மகளின் உடலை பார்த்த அதிர்ச்சியில் மாணிக்கம் சம்பவத்தன்று இரவு வரை மாம்பலம் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் காத்திருந்தார்.

பின்னர் வீட்டிற்கு வந்தவர் அமர்ந்திருந்த காரிலேயே மயக்கமடைந்து கிடந்தார். அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

மாணவியின் தாயான ராமலட்சுமி பரங்கிமலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தாலும், தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வீட்டிலிருந்து வெளியில் வர முடியாத நிலையில் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி இருந்தார். மகள் சத்யஸ்ரீ தான் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் ராமலட்சுமியிடம் மாணவி ரயில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதாகவே முதலில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தனது மகளின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றி, அவரது மகள் விபத்தில் சிக்கவில்லை ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை அவரது குடும்பத்தினர் இரவு தான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராமலட்சுமி இந்த செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகி மயக்கமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் அவரது கணவர் மாணிக்கமும் உயிரிழந்து விட இந்த தகவலை அவரிடம் எப்படி தெரிவிப்பது என தவித்துபோன குடும்பத்தினர் மருத்துவமனையில் இருவரது உடலும் பிரேத பரிசோதனை முடித்து வீட்டிற்கு கொண்டு வரும் வழியில் தான் ராமலட்சுமியிடம் கணவரும் உயிர் இழந்து விட்டார் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

தனது மகள் மரணத்திலிருந்து மீளாத ராமலட்சுமிக்கு , கணவரும் மரணம் என்ற செய்தியை கேட்டு நிலைகுலைந்தார். வீட்டிற்கு வெளியே இறுதிச் சடங்கிற்கு வைக்கப்பட்ட தந்தை - மகள் இருவரது உடலையும் பார்த்து மாணவியின் தாயாரும் அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

இந்த நிலையில் துக்கம் விசாரிக்க வந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் காலில் விழுந்து மாணவியின் தாய் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைப்பதாக இருந்தது

காதல் என்ற பருவ கோளாறில் சைக்கோ தனமாக சுற்றிய ஊதாரி இளைஞனால் ஒரு குடும்பமே நிர்மூலமாகி இருப்பதாக அக்கம்பக்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments